Saturday, October 6, 2012

மாவீரன் ஒண்டிவீரன் பெயரில் மனதிற்கு நிறைவாய் ஒரு விருது



இந்திய விடுதலைப் போராட்டத்தில் எத்தனையோ தலைவர்களின்
வீரர்களின் தியாகம் மறைக்கப்பட்டிருக்கிறது. கத்தியின்றி

ரத்தமின்றி பெற்ற சுதந்திரம் என காங்கிரஸ்காரர்கள் தங்களை
தாங்களே புகழும்போது அதிலே அடுத்தவர்களின் பங்கேற்பை
இருட்டடிப்பு செய்யும் உள்நோக்கம் அடங்கியுள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் போராடிய 
பலரது பங்களிப்பையே  இளைய தலைமுறை அறியாதவண்ணம்
வரலாற்றை திரு(ரி)த்தி எழுதிய  புண்ணியாத்மாக்கள்
துவக்க கால வரலாற்றில் மட்டும் கை வைக்காமல்
இருப்பார்களா என்ன?

1806 ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சியை முதல்
சுதந்திரப் போர் என்று அழைக்காமல்  அதன் பின்பு 51 
ஆண்டுகளுக்குப் பின்பு வடக்கில் நடைபெற்றதற்குத் தானே
அந்த கௌரவம் கிடைத்துள்ளது.

அதிலும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றால் நிலைமை இன்னும்
மோசம். வெள்ளையனுக்கு எதிராக போராடிய எத்தனையோ
வீரத் தளபதிகளின் தியாகம் வெளியிலே வரவேயில்லை.

வீரபாண்டிய கட்டபொம்மனையும் பூலித்தேவனையும்
மருது சகோதரர்களையும் தீரன் சின்னமலையையும்
அறிந்தவர்களுக்கு ஒண்டி வீரன் பற்றி அவ்வளவாக
தெரிவதில்லை.

அருந்ததியர் இனத்தைச் சேர்ந்தவர், பூலித் தேவனின்
தளபதி, வெள்ளையனுக்கு எதிராக வீரச்சமர் புரிந்தவர்,
எடுத்த பணியை முடிக்க தனது கையை வெட்டிக் கொண்டவர்,
தற்கொலைப் படையாக மாறியவர் என்று ஏராளமான
பெருமைகளுக்கு உரியவர்.

மாவீரன் ஒண்டி வீரன் பெயரில் தமிழ்நாடு அருந்ததியர்
அமைப்புக்களின் கூட்டமைப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின்
உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு விருது 
அளிக்கிறது.

இந்த ஆண்டு இந்த விருது அகில இந்திய இன்சூரன்ஸ்
ஊழியர் சங்கத்தின் தமிழ்நாட்டு அமைப்புக்களுக்கு
வழங்கப்படுகின்றது. 

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 
போராட்டங்களில் உறுதியான பங்கேற்பு, தலித் மாணவர்கள்
பணி நியமன நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற பதினைந்து
மையங்களில்  டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
பயிற்சி மையம் நடத்தி வருவது ஆகிய காரணங்களுக்காக
இந்த விருது வழங்கப்படுகின்றது.

இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் விழாவில் தென்
மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 
பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் இந்த
விருதைப் பெற்றுக் கொள்கிறார்.

இச்செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஒவ்வொரு
உறுப்பினரும் பெருமிதப்படும் நிகழ்வாகும்.

பணியை மேலும் விரிவாக எடுத்துச் செல்ல இந்த விருது
உற்சாகமளிக்கிறது, உத்வேகம் தருகிறது.
 

No comments: